இந்நேரம்.காம் | செய்தி | Tamil News

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு

மத்திய அமைச்சரவை காலியிடங்களை நிரப்புவது எங்கள் வேலையல்ல: கருணாநிதி!

மத்திய அமைச்சரவை காலியிடங்களை நிரப்புவது எங்கள் வேலையல்ல: கருணாநிதி!திரிணாமூல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியதையடுத்து மத்திய அமை‌ச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது, இதில் கூடுதலாக அமைச்சரவையில் தி.மு.க இடம்பெறுமா? என தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "காலியிடங்களை நிரப்புவது எங்கள் வேலையல்ல" என தெரிவித்தார்.

மேலும் சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?

பதில்: அது அந்தந்த மாநில உரிமைகளாகும். அவரவர்கள் தங்கள் மாநில நிலைமைகளுக்கேற்ப, மக்களுடைய கருத்துக்களையும் அறிந்து, அதை ஏற்றுக் கொள்வதாக கருத்து அறிவித்திருக்கிறார்கள்.

கேள்வி: மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களா?

பதில்: எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்து, எந்த கூட்டணியிலே நாங்கள் இடம் பெற்றாலும், அந்தக் கூட்டணியிலிருந்து அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் எப்போதும் காப்பாற்றுவோம். அப்படியே காப்பாற்றி வருகிறோம். கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை.


கேள்வி: அமைச்சரவை விரைவில் மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே தி.மு.கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்த மாதிரியான சூழலில் நீங்கள் அமைச்சரவையில் மேலும் இடங்களை எதிர்பார்க் கிறீர்களா? அளித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: காலி இடங்களை நிரப்புவது எங்கள் வேலை அல்ல.

கேள்வி: உங்கள் கட்சிக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: இதெல்லாம் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிலே விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா?

பதில்: ஒரு நாட்டின் பிரதமரையோ, ஜனாதிபதியையோ வரவேற்பது என்பதும், உபசரிப்பது என்பதும் மரபுகளாகும். அந்த மரபினை இந்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்ஷவின் இந்திய வருகையை தி.மு.கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் கண்டித்தும் கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல என்பது தான் தமிழ் மக்களின் கருத்து.

கேள்வி: கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுக்கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் சொல்லியும் கர்நாடக முதல்வர் தண்ணீர் கொடுக்க முடியாதென்று சொல்கிறாரே?

பதில்: இதைப் பற்றி நாங்கள் எங்களுடைய கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். கர்நாடகத்தோடு நட்பு முறையிலும், நேச மனப்பான்மையுடனும் கழகம் ஆட்சியிலே இருந்த போது கலந்து பேசி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீருக்காக நாங்கள் வாதாடியிருக்கிறோம், போராடியிருக்கிறோம். இப்போதும் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றாலும் நீதி மன்றத் தீர்ப்புகளைக் கூட அலட்சியப்படுத்துகின்ற அரசாக, கர்நாடக அரசு இருக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை. எனவே இதை விடக் கடுமையான நடவடிக்கை மூலம் அல்லது இந்திய நாட்டளவில் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்டக் கூடிய சட்டத் திட்டங்களை நிறைவேற்றுகிற வரையில் இப்படித் தான் நிலைமை இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: தமிழக அரசு இந்தப் பிரச்சினையிலே முறையாக நடந்து கொண்டிருக்கிறதா?

பதில்: நான் இப்போது தமிழக அரசைப் பற்றி சொல்லவில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது நல்லது அல்ல.

மேற்கண்டவாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

Share
//